நடப்பு 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி.
அதேநேரத்தில் இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக இந்திய அணி உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் லக்னோவில் உள்ள ஏக்நா மைதானத்தில் இன்று (அக்டோபர் 29) மோத உள்ளன. இந்த போட்டி, மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது.
இங்கிலாந்து அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா?
புள்ளிப் பட்டியலில், 10 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் வலுவான நிலையில் உள்ளன.
8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நியூசிலாந்து அணியும், நேற்றைய வெற்றியின் மூலம் அதே 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி 4வது இடத்தையும் பிடித்துள்ளன. இதன்மூலம், இந்த 2 அணிகளுமே தங்கள் அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.
மறுமுனையில், இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இருப்பினும், அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.
இங்கிலாந்து அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?
இங்கிலாந்து தனது அடுத்த 4 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளுடன் மோதவுள்ளது.
இங்கிலாந்து vs இந்தியா – அக்டோபர் 29, லக்னோ
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா – நவம்பர் 4, அகமதாபாத்
இங்கிலாந்து vs நெதர்லாந்து – நவம்பர் 8, புனே
இங்கிலாந்து vs பாகிஸ்தான் – நவம்பர் 11, கொல்கத்தா
முதலாவதாக, இந்த 4 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும்.
அதை தொடர்ந்து, தற்போது 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடனான தனது அடுத்த 3 போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
இந்த தொடரில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு, இன்னும் 4 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவற்றில் இந்த அணிகள் 2ல் மட்டுமே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒருவேளை, நியூசிலாந்து ஒரு போட்டியிலோ, இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் 3 போட்டியிலோ வென்றாலும் கூட, ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்ல, இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், தனது அடுத்த 4 போட்டிகளிலும் இங்கிலாந்து வெல்லும் பட்சத்தில், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
பிரார்த்தனை கூடத்தில் குண்டுவெடிப்பு: பெண் ஒருவர் பலி… கேரளாவில் பதற்றம்!
லியோ வெற்றி விழா: தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய காவல்துறை!