ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 2 சூப்பர் ஓவரில் விளையாடி த்ரில் வெற்றியுடன் சாதனை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஜனவரி 17) இரவு 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
களமிறங்கிய ஜெய்ஸ்வால் (4), விராட் கோலி (0), சிவம் துபே (1), சஞ்சு சாம்சன் (0) என் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி 22-4 என்று நெருக்கடியில் திணறியது. எனினும் ஒருபுறத்தில் களத்தில் நின்ற கேப்டன் ரோகித்தும், அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் பொறுப்புடன் விளையாடியதோடு, சிக்ஸர், பவுண்டரி என அதிரடியாகவும் ரன்கள் குவிக்க ஆட்டத்தின் போக்கு மாறியது.
ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் 64 பந்துகளில் சதமடித்தார். டி20 போட்டிகளில் இது அவரது 5 ஆவது சதமாகும். இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருடன் விளையாடிய ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு 36 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
22-4 என்ற நிலையில் இருந்து ரோகித்(121), ரிங்கு (69) இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டியதில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்த கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான குர்பாஸ் (50), ஜத்ரான் (50), குல்பதீன் நயிப் (55*) ஆகியோர் அதிரடி அரைசதம் கண்டனர். இதனால் இந்திய அணியின் 212 ரன் என்ற இலக்கை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்.
அதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் சரியாக 16 ரன்கள் அடித்ததால் மீண்டும் ஆட்டம் டை ஆனது.
இதனால் நடைபெற்ற 2வது சூப்பர் ஓவரில் முதலில் இந்திய அணி பேட் செய்தது. முதல் பந்தில் 6, இரண்டாவது பந்தில் 4 என ரோகித் அதிரடி காட்டினார். அடுத்து அவர் சிங்கிள் எடுக்க , அதற்கு அடுத்த பந்தில் ரிங்கு ஆட்டமிழந்தார், ஐந்தாவது பந்தில் ரோகித்தும் ரன் அவுட் ஆக இந்திய அணி 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தொடர்ந்து 12 ரன்கள் அடித்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு பிஷ்னோய் பந்துவீசினார். அவரது சுழற்பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்க நினைத்து, முதல் பந்தில் நபியும், 3வது பந்தில் குர்பாஸூம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது இந்தியா.
போட்டிக்கு பின்னர் ரோகித் பேசுகையில், “இது கடைசியாக எப்போது நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை. ஐபிஎல் போட்டிகளில் ஒன்றில் நான் 3 முறை பேட்டிங் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்.
பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியம், பெரிய கேம்களில் அந்த நோக்கத்தை இழக்காமல் இருப்பது முக்கியம். அதன்படி ரிங்குவும் நானும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்தோம், அதிரடியில் சமரசம் செய்ய வேண்டாம் என்று கூறிகொண்டோம். அது எங்களுக்கு பலன் அளித்தது.
விளையாடிய கடைசி இரண்டு தொடர்களில், ரிங்கு தனது பேட்டால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார். அவர் மிகவும் அமைதியானவர் மற்றும் அவரது வலிமையை நன்கு அறிந்தவர். அவர் வயதுக்கு மீறிய பொறுப்புடன் விளையாடி, இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்துள்ளார்” என்று ரோகித் பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்!
நாட்டின் பொருளாதார நிலை: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம்!