ஹாங்காங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான்!

விளையாட்டு

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று (செப்டம்பர் 2) ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் நடையைக் கட்ட, ஃபகர் ஜமான் களம் கண்டார்.

முகமது ரிஸ்வானுடன் இணைந்த அவர், ஹாங்காங் பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்தார். அவர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் களமிறங்கிய குஷ்தில் ஷாவும் தன்பங்கிற்கு அதிரடியில் மிரட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 35 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.

இறுதியில், ஹாங் காங் அணி 10.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4, முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பாகிஸ்தானின் டி20 வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால், இதற்குமுன் மேற்கிந்திய தீவுகள் அணியை 60 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றதே டி20 வரலாற்றில் பாகிஸ்தான் பெற்ற பெரிய வெற்றியாக இருந்தது.

நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டு ஹாங்காங்கை 38 ரன்களுக்கு சுருட்டி 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

ஆசிய கோப்பை – ஜடேஜா விலகல் : துபாய் செல்லும் ஆல்ரவுண்டர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *