லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 7) இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம்பிடித்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
கடந்த முறை நடைபெற்ற அதே 178 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியமிக்க ஓவல் மைதானத்தில் தான் நடப்பாண்டு உலக டெஸ்ட் இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.
இந்த மைதானத்தில் இதுவரை 104 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 88 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணிகள் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்துள்ளன.
முதலில் பேட்டிங் செய்த அணி 38 போட்டிகளிலும், முதலில் பீல்டிங் செய்த அணி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு சராசரியாக முதல் இன்னிங்ஸில் 343 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 304 ரன்களும், 3வது இன்னிங்ஸில் 238 ரன்களும், 4வது இன்னிங்ஸில் 156 ரன்களும் குவிக்கப்பட்டுள்ளன.
ஒரே இன்னிங்ஸ் – 903 ரன்கள்!
இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோராக 903 ரன்கள் குவிக்கப்பட்டது என்பது கிரிக்கெட் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும்.
1938 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளுக்கு 903 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
அந்த போட்டியில் விளையாடிய சர் லியோனர்டு ஹூட்டன் 364 ரன்களும், மாரிஸ் லே லேண்ட் 187 ரன்களும், 7வது விக்கெட்டுக்கு வந்த ஜோ ஹோர்ஸ்டாஃப் 169 ரன்களும் குவித்தனர்.
இதுவே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் முதன்முறையாக 900 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இந்த மகத்தான சாதனையை சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு கொழும்புவில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 952 ரன்கள் குவித்து முறியடித்தது இலங்கை அணி.
அதே நேரத்தில் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமான மைதானமாகவே ஓவல் மைதானம் பார்க்கப்படுகிறது. இங்கு சராசரியாக ஒவ்வொரு 54 பந்துகளுக்கு அல்லது 30 ரன்களுக்குப் பிறகு ஒரு விக்கெட் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா ஒப்பீடு!
இதற்கு முன் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 106 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 44 போட்டிகளிலும், இந்தியா 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
இதுவரை இரு அணிகளும் இந்தியா, ஆஸ்திரேலியாவில் உள்ள சொந்த மைதானத்தில் மட்டுமே மோதியுள்ளன.
இந்நிலையில் முதன்முறையாக இன்று இரண்டு அணிகளும் பொதுவான இடமாக இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சந்திக்கின்றன.
ஓவலில் இந்தியா – ஆஸ்திரேலியா
இதில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடைசியாக விளையாடிய போது இந்தியா வென்றது, அதே இடத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
ஓவல் மைதானத்தில் இந்தியா இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டில் வெற்றி, ஐந்தில் தோல்வி, 7ல் டிராவும் செய்துள்ளது. கடைசியாக ஓவல் மைதானத்தில் விளையாடிய இந்தியா 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி ஓவல் மைதானத்தில் இதுவரை 38 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 7ல் வெற்றி, 17ல் தோல்வி, 14ல் டிரா செய்துள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக முதன்முறையாக சந்திக்க உள்ளன. இதில் முதல் வெற்றியுடன் கோப்பையை ருசிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
WTC Final : ஆஸ்திரேலியாவை வெல்லத் துடிக்கும் இந்தியா… 3 முக்கிய காரணங்கள்!
பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கோவிலுக்கு சீல்!
எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்!
நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் பிரச்சினை வராது!