ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் இன்று (மார்ச் 31) குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்:
BCCI என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படுவது தான் இந்தியன் பிரீமியர் லீக் (IPL).
2008 ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் எட்டு அணிகள் பங்கேற்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ்.
முதல் சீசனில் மொத்தம் 59 போட்டிகள் நடைபெற்றன. 2008 ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய முதல் கேப்டனாக ஷேன் வார்னே ஆனார்.
ஐபிஎல்லின் முதல் சிக்ஸர் 2008 ஆம் ஆண்டு முதல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான பிரண்டன் மெக்கலத்தால் அடிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் இந்த சிக்சர் அடிக்கப்பட்டது. அதே ஓவரில் ஐபிஎல் தொடரின் முதல் பவுண்டரியையும் அடித்தார் மெக்கல்லம்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் சிக்சர் மற்றும் பவுண்டரி கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பெயர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஜாஹீர் கான் வசம் வந்தது.

மேலும் ஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகவும் பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அந்த முதல் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், 73 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 158 ரன்களை எடுத்தார்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் தக்கவைத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் இதுவரை 142 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 357 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் விளையாடிய 184 ஆட்டங்களில் 251 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய ரோகித் ஷர்மா 240 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும், சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜியாண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடிய மகேந்திர சிங் தோனியும் 229 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 701 பவுண்டரிகளை அடித்து முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 578 பவுண்டரிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 561 பவுண்டரிகளுடன் 3வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 519 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 506 பவுண்டரிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதுவரை நடந்துள்ள 15 ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 75 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக 2022 ஆம் ஆண்டு எட்டு சதங்களும், குறைந்தபட்சமாக 2009 ஆம் ஆண்டு இரண்டு சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 6 சதங்கள் அடித்து அதிக தனிநபர் சதங்கள் அடித்த வீரராக முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 5 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேஎல் ராகுல் ஆகியோர் தலா 4 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கலாஷேத்ரா பாலியல் புகார்: மகளிர் ஆணையம் விசாரணை!
கலாஷேத்ரா விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!