ஹாட்ரிக் வெற்றி… செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

விளையாட்டு

ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் கடந்த செப்டம்பர் 11 அன்று துவங்கிய 45வது செஸ் ஒலிம்பியாட், செப்டம்பர் 23 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில், ஓபன் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை 3 சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஓபன் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளிலும், 3 சுற்றுப் போட்டிகளிலும் இந்திய அணிகள் அபார வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.

ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகிய 5 பேர் கொண்ட அணி களமிறங்கியது. இந்த அணி முதல் சுற்றில் மொரோக்கோவுக்கு எதிராக 4-0 என வெற்றி பெற்றது. 2வது சுற்றில் ஐசுலாந்துக்கு எதிராகவும் 4-0 என வெற்றி பெற்றது.

இந்நிலையில், 3வது சுற்றில் ஹங்கேரி பி அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில், டி குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி களமிறங்கினர்.

இந்த சுற்றில், விதித் குஜ்ராத்தி மற்றும் தனது ஆட்டத்தை ட்ராவில் முடிக்க, மற்ற 3 வீரர்களும் வெற்றியை கைப்பற்றினர். இதை தொடர்ந்து, 3வது சுற்றிலும் 3.5-0.5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஓபன் பிரிவின் 4வது சுற்றில், இந்திய அணி செர்பியன் அணியுடன் மோதுகிறது.

அதேபோல, மகளிர் பிரிவில் ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த அணி, முதல் சுற்றில் ஜமைக்காவை 3.5-0.5 என வீழ்த்தி, 2வது சுற்றில் 3.5-0.5 என செக்கியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.

இந்நிலையில், 3வது சுற்றில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்களில் ஹரிகா அதிர்ச்சி தோல்வியடைய, மற்ற 3 வீராங்கனைகளும் தங்கள் போட்டியில் வெற்றி பெற்று, 3-1 என இந்தியாவிற்கு ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்நிலையில், 4வது சுற்றில் இந்த அணி பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

4வது சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 14 அன்று மாலை 6:30 மணிக்கு துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

– மகிழ்

பொங்கல் பண்டிகை: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள் – பயணிகளின் முக்கிய கோரிக்கை!

டிஜிட்டல் திண்ணை: 13  பள்ளிகளில் பேச ஏற்பாடு… மகாவிஷ்ணுவுக்காக கல்வித் துறை அமைத்த வாட்ஸ் அப் க்ரூப்! -பகீர் ஆதாரங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *