புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா என சாக்ஷி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக இருப்பவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்படவில்லை.
இதனை கண்டித்து நேற்று (மே 28) புதிய பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் முன்னெடுத்தனர்.
அதன்படி நேற்று மதியம் ஜந்தர் மந்தரில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் போராட்டம் நடத்திய சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரபல இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தற்போது கடுமையான கேள்வியினை எழுப்பியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் “பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு 7 நாட்கள் ஆனது. ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் கூட ஆகவில்லை.
இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்து விட்டதா? மத்திய அரசு தனது வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது” என்றார்.
இதற்கிடையே பல மணிநேர காவலுக்குப் பிறகு, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சில மல்யுத்த வீராங்கனைகள் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா