அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம், இப்போதே சூடுபிடிக்க துவங்கிவிட்டது.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே ஐ.பி.எல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடரை வழக்கம் போல மார்ச் மாதத்திலேயே துவங்க ஐ.பி.எல் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
10 அணிகள் ஒரு கோப்பைக்காக மோதிக்கொள்ள உள்ள இந்த 2024 ஐ.பி.எல் தொடர், மார்ச் 22 அன்று துவங்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 19 அன்று நடைபெற்ற ஏலத்தில், முக்கிய வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு அணியில் எடுத்தது.
ஐ.பி.எல் ஏல வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்சல் ஸ்டார்க் (ரூ.24.75 கோடி) மற்றும் பேட் கம்மின்ஸ் (ரூ.20.50 கோடி) என 2 வீரர்கள் ரூ.20 கோடிக்கும் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த ஏலத்திற்கு முன்பு, ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக 5 முறை கோப்பையை வாங்கி தந்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை அணியின் புதிய கேப்டனாக நியமிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா முழுமையாக குணமடையாததால், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த காயம் காரணமாக 2024 ஐ.பி.எல் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளாது.
ஒருவேளை, அவர் 2024 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமிக்கப்படலாம்.
முன்னதாக, இந்திய அணியின் நட்சத்திர டி20 பேட்ஸ்மென் சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.
ஒருவேளை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவரும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினால், 2024 ஐ.பி.எல் தொடர் மும்பை அணிக்கு மிக கடினமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று!
“வாழ்த்து சொல்ல வந்தேன்”: ED அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரம்