வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டு அப்போட்டியில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா, தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இந்த செய்தி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியா தனது 4வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், முதலில் பந்துவீசிய இந்திய அணிக்காக 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, அவருக்கு கால் இடறி இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.
அந்த காயம் குணமடையாததால், அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான், ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது இடது கணுக்காலில் முதல் தர தசை கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இதை தொடர்ந்து, இந்தியாவின் லீக் சுற்று போட்டிகளின்போது ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவது கடினம் என்றும், நாக்-அவுட் சுற்று ஆட்டங்களின்போது அவர் அணிக்கு திரும்பிவிட அதிக வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மாற்றாக, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் சாதி ரீதியிலான கொலைகள்: இரும்புக்கரம் நீட்டுமா அரசு?