வங்கதேசத்தில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது இந்தியா.
அந்த 2 போட்டிகளிலுமே ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டும், மெஹதி ஹசன் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் தட்டிப்பறிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியாவுக்கு பேட்டிங்கில் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் சொதப்பலாக செயல்பட்டு ஏமாற்றமளித்தனர்.
இதனால் தோல்வியை தவிர்க்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியில் 19 ரன்களும் 2 விக்கெட்டுகளும் 2 -வது போட்டியில் 2 விக்கெட்டுகளும் 11 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி காயத்தால் வெளியேறிய அவர் கடந்த பிப்ரவரி மாதம் 2வது போட்டியில் விளையாடி நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் காயமடைந்து வெளியேறினார்.
அதை தொடர்ந்து ஜிம்பாப்வே தொடரில் விளையாட தேர்வானாலும் மீண்டும் காயமடைந்து வெளியேறிய அவர் சமீபத்திய நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுத்து முதல் போட்டியில் அதிரடியாக 37* (16) ரன்களும் கடைசி போட்டியில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மேலும் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டுள்ள இவர் சச்சின், சேவாக் ஆகியோரது வரிசையில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய வீரராக உருவெடுப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகராக சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை கொண்டவர் என்று முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேற்று (டிசம்பர் 8 ) அவர் பேசியதாவது “வாஷிங்டன் சுந்தர் வருங்கால நட்சத்திரமாக இருப்பார். அவர் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்.
அதே போல் முழுமையான 10 ஓவர்களை அதுவும் குறைந்த எக்கனாமியில் அவரால் பந்து வீச முடியும். இருப்பினும் நிறைய விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை மட்டும் அவருக்கு தேவைப்படுகிறது.
அந்த வகையில் நல்ல ஆல் ரவுண்டரான அவரை வருங்கால இந்திய அணியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை நீங்கள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்றழைத்தால் வாஷிங்டன் சுந்தரை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்று தாராளமாக அழைக்கலாம்.
இருவருமே அணிக்கு கச்சிதமாக பொருந்தி பேட்டிங், பவுலிங் ஆகிய துறையில் அசத்தக்கூடியவர்கள்”அவர்களில் ஒருவர் 5வது பந்து வீச்சாளராக செயல்படலாம் அல்லது இருவரும் இணைந்து 10 ஓவர்களை பகிர்ந்து பந்து வீசலாம்.
மொத்தத்தில் வாஷிங்டன் சுந்தர் புதையலை போன்றவர். அவரது திறமையை புரிந்து கொண்டு இந்திய அணி நிர்வாகம் அவரை முதிர்ச்சியுடன் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காலிறுதி சுற்று: அர்ஜென்டினா vs நெதர்லாந்து..வெற்றி யாருக்கு?
மலக்குழி மரணம் : விட்னஸ் படம் எப்படி?