2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்தியா, அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
டி20 தொடர் ஜூலை 26 அன்று துவங்கவுள்ள நிலையில், 2வது டி20 போட்டி ஜூலை 27 அன்றும், 3வது டி20 போட்டி ஜூலை 29 அன்றும் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளும் பல்லேகேலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 2 நாட்கள் இடைவேளைக்கு பின், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 1 அன்று துவங்கவுள்ளது. இந்த தொடரின் 2வது போட்டி ஆகஸ்ட் 4 அன்றும், 3வது போட்டி ஆகஸ்ட் 7 அன்றும் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட கவுதம் கம்பீர், இந்த தொடரில் இருந்தே தனது பொறுப்பை துவங்குவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் போன்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே டி20 தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அணியில் ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஓய்வுக்கு பின் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும், ருதுராஜ் கெய்க்வாத், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான அணியை களமிறக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான கண்ணாடி எது?
ஹெல்த் டிப்ஸ்: எலும்பு முறிந்தவர்களுக்கு ஏற்ற உணவுகள் எது தெரியுமா?
டாப் 10 நியூஸ்: செந்தில் பாலாஜி வழக்கு முதல் இந்தியன் 2 ரிலீஸ் வரை!