பாண்டியா சகோதரர்கள் தங்களது ஜெர்சியை மைதானத்தில் வைத்து ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்களும், விருத்திமான் சாஹா 47 ரன்களும் எடுத்தனர்.
இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சகோதரர்களான ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரும் எதிரெதிர் அணிகளில் மோதினர்.
போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரும் தங்களது ஜெர்சியை மைதானத்தில் வைத்து மாற்றிக்கொண்டனர். இந்த வீடியோவை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய சகோதரர் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பாண்டியா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
கங்கனாவின் எமர்ஜென்சி: ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!