Ranji Trophy : ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி தொடரில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்ற நடப்பு சாம்பியன் மும்பை அணி இன்று (ஜனவரி 25) மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நேர்ந்த இந்த பரிதாப தோல்வியால் ஆவேசமான பிசிசிஐ, இந்திய அணி சீனியர் வீரர்களை உள்ளூர் போட்டியான ரஞ்சி தொடரில் விளையாட நிர்பந்தம் செய்தது.
அதன்படி ஜம்மு காஷ்மீருக்கு எதிராக களமிறங்கிய நடப்பு சாம்பியனான மும்பை அணியில் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே உள்ளிட்ட இந்திய சீனியர் அணி வீரர்கள் இடம்பெற்றனர்.
ரோகித் வந்தாலும் அஜிங்யா ரஹானே தலைமையில் தான் களமிறங்கியது மும்பை அணி.
மும்பையில் உள்ள சரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி போட்டி தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் (3), ஜெய்ஸ்வால் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (11), ரஹானே (12) ஷிவம் துபே (0) என மூத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணியில் இந்திய சீனியர் அணி வீரர்கள் இல்லாத போது முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி, ஷர்துல் தாக்குதலின் அசத்தலான சதத்தால் (119) 290 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றியுடன் களமிறங்கியது ஜம்மு காஷ்மீர் அணி. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் அபித் முஷ்டாக் மற்றும் கன்ஹையா வாதவன் சேர்ந்து அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த அணி49 ஓவரில் 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஜம்மு காஷ்மீர் அணி 29 புள்ளிகளுடன் தனது குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜம்முவின் யுவீந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த தோல்வியின் மூலம் ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார் ரோகித் சர்மா. அவருக்கு எதிராக மைதானத்திலேயே ரசிகர்கள் கேலி செய்து கோஷமிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா ரசிகர்கள் ரசிகர்கள் தொடர் முழுவதும் அவரை கேலி செய்து கோஷமிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அதற்கு பழிக்குபழியாக ரோகித் சர்மாவை கேலி செய்து வருகின்றனர் ஹர்திக் ரசிகர்கள்.