கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்டை தொடக்க வீரராக களமிறங்கும் முடிவை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பையில் தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கான காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சமீப காலமாக எந்த போட்டியிலுமே சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படும் கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரது இந்த சொதப்பலான பேட்டிங் இந்திய அணியின் தோல்விக்கு மற்றுமொரு காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய அவர், 2021 டி20 உலகக் கோப்பை, 2022 ஆசியக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை தொடர்களில்,
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் உட்பட இதுவரை களமிறங்கிய போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து,
அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி, தொடர்ச்சியாக சொதப்பி வரும் ராகுலுக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கும் முடிவை ரோகித் சர்மா எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி ஹர்பஜன் சிங் நேற்று (அக்டோபர் 30 ) பேசியபோது ”இந்தத் தொடரில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கு இந்திய அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதையும் மேட்ச் வின்னர் என்பதையும் நாம் அறிவோம்.
இதே பார்மில் தொடர்ச்சியாக அவர் தடுமாறினால் நீங்கள் ரிஷப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதே சமயம், தினேஷ் கார்த்திக் காயம் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் குணமடையவில்லை என்றால் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கலாம்.
அதனால் உங்களுக்கு ஓப்பனிங்கில் வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கும். தீபக் ஹூடாவை நீங்கள் அணியில் சேர்க்கலாம்.
ஆனால் அவருக்கு ஒரு சில ஓவர்கள் பந்து வீச அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
தென்காசி தீண்டாமை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!