இந்திய அணியில் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் உலக கோப்பை போட்டிகளில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோத உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறும்போது, “சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் 55.71 சராசரி வைத்திருந்தும் அணியில் இடம்பெறவில்லை என்றால் ஆச்சரியமாக உள்ளது.
கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். இருவரும் உலக கோப்பை போட்டியில் இடம்பிடித்துள்ளனர். சஞ்சு சாம்சன் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என்று எனக்கு தெரியும். அவருக்கு வயதாகிவிடவில்லை.
கடுமையான பயிற்சியில் அவர் ஈடுபட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். சாம்சன் நல்ல வீரர் தான். தற்போதைய சூழலில் மூன்று விக்கெட் கீப்பர்களை பயன்படுத்த முடியாது. பிளேயிங் லெவனில் அனைவரையும் சேர்ப்பது கடினம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா