சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் போட்டியில் குகேஷ் சாம்பியன் ஆனார். இதன் மூலம் 11.45 கோடியை பரிசாக பெற்றார். இது தவிர தமிழக அரசு அவருக்கு சிறப்பு பரிசாக 5 கோடியை நேற்று வழங்கியது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (டிசம்பர் 17) நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு 5 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சாம்பியன் ஆன போதும், தற்போது குகேஷ் சாம்பியன் ஆன போதும் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தும் வாய்ப்பு திமுக அரசுக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இன்னும் திறமைவாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க இந்த விழாவில் புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ‘Home of Chess’ எனும் சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, குகேஷ் பெற்ற பரிசுத் தொகைக்கு வரி பிடித்தம் செய்யக் கூடாது என்று நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். குகேசுக்கு பண மழை குவிந்தாலும் அவர் தனது 11. 45 கோடி பரிசுத் தொகையில் இருந்து 4.9 கோடி வரியாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியது இருக்கும். அவரது பரிசுத் தொகையில் அடிப்படை வரியாக 30 சதவிகிதம் என்றால் 3.43 கோடி வருகிறது. அடுத்து கோடிக்கும் அதிகமாக வருமான வரி செலுத்தும் போது இதில் 15 சதவிகிதம் கூடுதல் வரியாக செலுத்த வேண்டும்.
அப்படியென்றால் 3.43 கோடிக்கு 50. 52 லட்சத்தை சேர்க்க வேண்டும். அடுத்து வருமான வரி செலுத்துபவர்களிடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு என்று வரியில் இருந்து 4 சதவிகிதம் பிடிக்கப்படுகிறது. அப்படியென்றால் 3.43 கோடிக்கு 13.74 லட்சம் செலுத்த வேண்டும். ஆக, 4.9 கோடி வரியாக செலுத்தப்பட்டது போக 7.36 கோடி குகேஷுக்கு கிடைக்கும்.
அதில், இன்னொரு விஷயமும் உள்ளது. போட்டி நடந்தது சிங்கப்பூரில். குகேஷ் இந்திய குடிமகன் என்பதால், இந்திய வரிவிதிப்பு நடைமுறைக்குள் வருகிறது. தமிழ்நாடு அரசு கொடுத்த 5 கோடி பரிசுத் தொகையில் இருந்தும் 2.14 கோடியை மத்திய அரசுக்கு வருமான வரியாக குகேஷ் செலுத்த வேண்டும்.
மொத்தம் குகேஷ் பெற்ற 16.45 கோடி பரிசு தொகையில் இருந்து 6.23 கோடி வரியாக கழித்து ரூ 10.22 கோடிதான் குகேசுக்கு இறுதியாக கையில் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஓய்வை அறிவித்த சுழல் புயல் அஸ்வின்… ரசிகர்கள் ஷாக்!
பொன் மகளான ஆட்டோ ஓட்டுநர் மகள்.. கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!