சொதப்பிய மும்பை: குஜராத் அபார வெற்றி!
மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நேற்று (ஏப்ரல் 25) இரவு மும்பை – குஜராத் அணிகள் மோதின.
அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய குஜராத் அணியின் வீரர்கள் அனைவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 207 ரன்கள் எடுத்திருந்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தி 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மில்லர், 46 ரன்களும் அபினவ் மனோகர் 42 ரன்களும் ராகுல் 20 ரன்களும் விஜய் சங்கர் 19 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் சஹா 4 ரன்களும் ரஷித் கான் 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை அணி பேட்டிங்கிற்கு களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இஷன் கிஷான் களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் நிதானமாக விளையாடிய கிரீன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதில் மும்பை அணி திணறியது.
இதனால் 20 ஓவர் இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. எனவே குஜராத் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி மோசமாக தோற்றது.
மும்பை அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 40 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணியில் நுர் அகமது 3 விக்கெட்டுகளையும், மோகித் ஷர்மா மற்றும் ரஷித் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நேற்றைய தினம் பெற்ற வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் சென்னை அணிக்கு அடுத்ததாக 2வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் 36வது லீக் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன.
இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மோனிஷா
உங்கள் பகுதியில் கழிப்பறை வசதி வேண்டுமா?
வேலைவாய்ப்பு : ராணுவத்தில் பணி!