லக்னோ அணிக்கு எதிரான இன்றைய (மே 7) போட்டியில் அதிரடியாக விளையாடிய குஜராத் அணி வீரர்கள் கில், சாஹா இருவரும் சதமடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு வாணவேடிக்கையை காட்டியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாஹா 20 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 81 ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடப்பு தொடரில் இது அவரது 4வது அரைசதமாகும்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் அவராவது சதமடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவரில் அதற்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 9 ரன்கள் மட்டுமே சுப்மன் கில் எடுத்தார். இதனால் 6 ரன்களில் அவரது ஐபிஎல் தொடரின் முதல் சதம் மீண்டும் மிஸ் ஆனது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய சுப்மன் கில் 94 ரன்களுடனும், மில்லர் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சுப்மன் கில் சதத்தை தவறவிட்டாலும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவு செய்த அதிகப்பட்ச ஸ்கோராக இது அமைந்தது.
இதனையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? : மகன் ஜெய பிரதீப் விளக்கம்!
கடும் சோதனைகளுடன் தொடங்கியது நீட் தேர்வு!