IPL 2024 : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய குஜராத் அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 10) இரவு ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் நடப்பு தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்று தோல்வியை சந்திக்காத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
பராக் – சாம்சன் அபாரம்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் (24) மற்றும் ஜோஸ் பட்லர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் அதன்பின்னர் இணைந்த ரியான் பராக் – கேப்டன் சஞ்சு சாம்சன் கூட்டணி அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
48 பந்தில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்த ரியான் பிராக் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஆடிய சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் குவித்தார்.
குஜராத் அணி தரப்பில் உமேஷ், ரஷீத் மற்றும் மொஹித் சர்மா மூவரும் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
குறுக்கிட்ட மழை… ஏமாந்த ராஜஸ்தான்
தொடர்ந்து 197 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிதானமாகவே விளையாடியது.
முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களத்திற்கு வேட் வந்து 5 பந்துகளைச் சந்தித்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது டக்வெர்த் லூயிஸ் விது முறைப்படி, குஜராத் அணி வெற்றி பெற வேண்டுமென்றால் 86 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 9 ரன்கள் குறைவாக இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்தால் வெற்றி வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு தான் என உள்ளூர் ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றுவிட, ஆட்டம் மீண்டும் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போதும் ராஜஸ்தான் கையே ஓங்கியது. 11வது ஓவரை வீசிய குல்தீப் சென் அந்த ஒரே ஓவரில் வேட்(4) மற்றும் அபினவ் மனோகரின்(16) விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்!
இதனையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியாக ஆட முயற்சித்து ஸ்வேந்திர சஹால் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இத்தனை களபேரத்துக்கு இடையிலும் ஒரு பக்கம் நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில்(72), கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்ப, உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரம் மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில் 6வது விக்கெட்டுக்கு ராகுல் திவாட்டியாவும், இம்பேக்ட் பிளேயரான ஷாருக்கானும் இணைந்தனர்.
கடைசி நேர பதட்டம்.. குல்தீப் சொதப்பல்!
இருவரும் பொறுமையாக விளையாட, கடைசி 3 ஓவர்களில் குஜராத் அணி வெற்றி பெற 42 ரன்கள் தேவைப்பட்டது.
18வது ஓவரை வீசிய ஆவேஷ்கானின் லோ புல் டாஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஷாருக்கான் வெளியேறினார். மேலும் அந்த ஓவரில் 7 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார் ஆவேஷ்.
களத்தில் தெவாட்டியாவும், ரஷீத் கானும் இருக்க, குஜராத் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய குல்தீப் சென் பதட்டத்தில் 2 வைடு 1 நோபாலுடன் 20 ரன்களை வழங்கினார்.
திக் திக் வெற்றி!
இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷீத்கான், 2வது பந்தில் 2 ரன்கள் மற்றும் 3வது பந்தில் பவுண்டரியுடன் 10 ரன்கள் குவித்தார்.
4வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 5வது பந்தை எதிர்கொண்ட தெவாட்டியா, 3வது ரன்னுக்கு ஓட முயற்சித்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிட, ஆவேஷ் கான் வீசிய பவுன்சரை அழகாக பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார் ரஷீத் கான்.
Afghani Power delivers on Eid 💫
Rashid Khan finishes off in Style 💥#RRvsGT #GTvsRR #RashidKhan #EidAlFitr2024 pic.twitter.com/TZsVzIVTZ7— Richard Kettleborough (@RichKettle07) April 10, 2024
இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்த குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேவேளையில் இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவாத அணியாக வலம் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்த ரஷீத் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மோடி தான் இந்தியாவின் முதல் எதிரி” : வைகோ ஆவேசம்!
பத்தவச்சிட்டாரு டீக்கடக்காரரு : அப்டேட் குமாரு