இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரஹாம் தோர்ப் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலமானார். இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 1996 , 1999 ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர்.
கடைசியாக 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். தற்போது, 55 வயதாகும் கிரஹாம் தோர்ப் உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி அமண்டா கூறியுள்ளார்.
கடந்த இரு வருடங்களாக தோர்ப் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். பின்னர், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஒதுங்கிக் கொண்டார்.
இது குறித்து அமண்டா கூறுகையில், “கிரிக்கெட் விளையாடும் போது தோர்ப் மனதளவில் பலமான வீரராக இருந்தார். உடல் அளவில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. மன உளைச்சல் ஏற்பட்டால் அது பல விளைவுகளை உருவாக்கும். அதனால் மன அழுத்தத்தை யாரும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். அது யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாதிக்கும்.
மன உளைச்சலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையில் ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால், கடைசியில் பலன் கிடைக்கவில்லை. ஒரு குடும்பமாக நாங்கள் அவருக்குத் துணையாக நின்றாலும், எதுவுமே கைகொடுக்கவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
“எனது தந்தை மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூற நாங்கள் வெட்கப்படவில்லை. இது போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்” என்று கிரஹாம் தோர்ப்பின் மகள் கிட்டி கூறியுள்ளார்.
-எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள்… மகளை கொன்ற தாய்!