எப்போதும் கூலாக காணப்படும் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியை, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளரும், வீரரும் சீண்டிவிட்டு கோபமடைய வைத்தனர்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி போட்டியில் நேற்று(டிசம்பர் 9)வலிமையான அர்ஜென்டினா அணியும், நெதர்லாந்து அணியும் மோதின.
இதில் பெனால்டி கிக் முறையில் 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டி, அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸியின் கோப முகத்தை காட்டியிருக்கிறது.
எப்போதும் கூலாக இருக்கும் மெஸ்ஸி, நெதர்லாந்து பயிற்சியாளர் மற்றும் வீரர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
அர்ஜெண்டினாவுடனான நெதர்லாந்து அணியின் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் ஒரு வார்த்தையை விட்டிருந்தார். ஃபிஃபா கால் இறுதிப் போட்டிக்கு முன்பு பேசிய அவர், மெஸ்ஸியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
இதை மனதில் வைத்திருந்த மெஸ்ஸி, நெதர்லாந்துக்கு எதிராக நான்காவது கோலை அடித்த பிறகு, வான் காலின் முன்னால் காதுகளை கைகளால் பிடித்து கிண்டலாக காட்டினார்.
இதேபோன்று, மெஸ்ஸியை நெதர்லாந்து வீரர் வூட் வெகோர்ஸ்ட்டும் சீண்டிக் கொண்டே இருந்தார். மெஸ்ஸி போட்டிக்குப் பிறகு கால்பந்து மைதானத்தில் நிருபருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வூட் வெகோர்ஸ்ட் குறுக்கிட்டார்.
இதனால் பொறுமையை இழந்த மெஸ்ஸி, தள்ளிப்போ என்று கடுப்பாக பேசினார். யாரைப் பார்க்கிறாய் என்று கேட்ட மெஸ்ஸி முட்டாளே முன்னே போ என்று ஸ்பானிஷ் மொழியில் கடுமையாகத் திட்டினார்.
காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்த அர்ஜெண்டினா, டிசம்பர் 14 ஆம் தேதி நடக்கும் அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த குரோஷியா அணியை எதிர்கொள்கிறது.
இந்த உலகக்கோப்பை போட்டியுடன் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கோப்பையை வெல்ல தனது முழு திறமையையும் காட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கலை.ரா
“மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போய்டாதீங்க” : வைரலாகும் ட்வீட்!