கே.எல்.ராகுல் தனது திறமையை நம்பவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான, கே.எல்.ராகுல் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து திணறி வருகிறார்.
இந்திய அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆகி இந்திய அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது போட்டியில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்தநிலையில், கே.எல்.ராகுலின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு முறையும் ராகுல் ரன் எடுக்காததை நான் பார்க்கிறேன். அவரிடம் இருக்கும் திறமை அவருக்கு தெரியவில்லை. அவர் தன்னை நம்புவதாக தெரியவில்லை.
அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர். அபாரமான திறமைகளை கொண்டவர். ’பந்துகளை எல்லைக்கோட்டிற்கு பறக்க விட போகிறேன்’ என்று துடிப்புடன் அவர் சொல்ல வேண்டும்.
அத்தகைய மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும். அவரது இந்த செயல்பாடு இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்தும். விராட் கோலியின் அனுபவத்தை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு கே.எல்.ராகுல் ஃபார்மிற்கு வர வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்