Gavaskar quotes only one ms dhoni
‘எம்.எஸ்.தோனியாக யாரும் இருக்க முடியாது’ என்று கூறி துருவ் ஜூரல் குறித்த தனது கருத்தை சுனில் கவாஸ்கர் திரும்ப பெற்றுள்ளார்.
ராஞ்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது பின்வரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் உறுதியுடன் விளையாடி 90 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியில் இருந்து தப்பித்த இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.
இதனையடுத்து இந்தியாவின் ஜாம்பவன்களான சச்சின், சேவாக், கும்பிளே என பலரும் துருவ் ஜூரலின் அபாரமான ஆட்டத்தை பாராட்டினர்.
அப்போது லோ ஆர்டரில் இறங்கி சிறப்பாக விளையாடிய ஜூரலின் பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையை தோனியுடன் ஒப்பிட்டார் சுனில் கவாஸ்கர்.
அவரை விளையாட விடுங்கள்!
இந்த ஒப்பீட்டை பலரும் விமர்சித்தனர். இந்திய முன்னாள் வீரரான கங்குலி, “ஜூரலுக்கு திறமை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எம்எஸ் தோனி ஒரு வித்தியாசமான வீரர். தனது உழைப்பால் அவர் லெஜண்டாக மாறுவதற்கு 20 வருடங்கள் ஆனது.
எனவே ஜூரலை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். இளம் வீரரான அவரை இப்போது விளையாட விடுங்கள். அவர் இன்னும் தனது உச்சபட்ச திறமையுடன், மிக முக்கியமாக அழுத்தமான சூழ்நிலைகளில் விளையாட வேண்டும்” என்று கங்குலி தெரிவித்தார்.
ஒரே ஒரு தோனி மட்டுமே!
இந்த நிலையில் தர்மசாலாவில் நடக்க இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை முன்னிட்டு ஜூரல் – தோனி ஒப்பீடு குறித்து நேற்று கவாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “மைதானத்தில் சூழ்நிலையை மதிப்பிடும் விதம் மற்றும் அதற்கேற்ப பேட் செய்யும் விதம் என துருவ் ஜூரல் ஆட்டத்தை பார்த்தால், அவர் எனக்கு தோனியின் பிம்பமாக தோன்றினார்.
இடையே ஒரு சிக்ஸர் அடித்து விட்டு, ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய ஒன்று, இரண்டு ரன்களுக்கு தோனி ஓடுவார். அதை தான் ராஜ்கோட் டெஸ்டில் ஜூரல் செய்தார்.
விக்கெட் கீப்பிங்கிலும் இளம் வயதில் தோனியிடம் இருந்த அதே விக்கெட் தேடும் துடிப்பு ஜூரலிடம் இருக்கிறது.
ஜூரல் எம்எஸ் தோனியைப் போன்றவர் தான். ஆனால் எம்எஸ் தோனியாக யாராலும் ஆக முடியாது. நமக்கு ஒரே ஒரு எம்எஸ் தோனி மட்டுமே இருக்கிறார்.
ஆனால், தோனி செய்த காரியங்களில் ஒரு பகுதியையாவது ஜூரல் செய்ய முடிந்தால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போலியோ சொட்டு மருந்து முகாம் : ஸ்டாலின் வேண்டுகோள்!
இந்தியாவில் மீன் சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் இதுதான்!