முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலியின் ஆட்டம் குறித்து சமீபத்தில் பேசி இருந்தார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட போது, கவுதம் கம்பிர், “பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை?” என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட கவாஸ்கர் – பார்டர் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இதற்கிடையே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை சீண்ட தொடங்கியுள்ளனர்.
இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின் போதும் இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கேலி செய்யும் விதத்தில் பேசுவது வாடிக்கையாக இருந்துள்ளது. தற்போதைய டெஸ்ட் தொடருக்கு முன் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார்.
அவர் கூறும்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்து உள்ளார். வேறு எந்த அணியின் டாப் ஆர்டர் வீரர் நீண்ட காலமாக சதம் அடிக்காமல் இருந்தால் அணியில் நீடிக்க முடியாது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 93 ரன்களும், ரோஹித் சர்மா 91 ரன்களும் எடுத்து இருந்தனர். அவர்களது பேட்டிங் சராசரி அந்த தொடரில் 15 ரன்கள் தான்’ என்று சாடியிருந்தார்.
ரிக்கி பாண்டிங்கின் விமர்சனம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய கம்பிர், “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி எந்த கவலையும் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் பாண்டிங்கிற்கு என்ன வேலை உள்ளது?. அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனுத் தாக்கல்!
டிரம்ப் மனைவி மெலானியாவின் நிர்வாண படம்…. ஒளிபரப்பிய ரஷ்ய அரசு டிவி!