இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?
தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவடைகிறது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின், அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகவுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்றுவந்தது.
ஜூலை 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை, 3.5 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் மே 27 வரை பிசிசிஐ இந்த விண்ணப்பங்களை பெற்றுவந்தது.
மேலும், இந்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது ஏதேனும் டெஸ்ட் விளையாடும் நாட்டிற்கு 2 ஆண்டுகள் முழு நேர தலைமை பயிற்சியாளராக பணியாற்றி இருக்க வேண்டும், அல்லது ஏதேனும் ஐபிஎல் அணிக்கு 3 ஆண்டுகள் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த பதவிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரிக்கி பான்டிங், ஜஸ்டின் லாங்கர் ஆகியோரை பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியான நிலையில், 2 பேருமே அந்த பொறுப்புக்கு ஆர்வம் காட்டவில்லை.
அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை தான் பிசிசிஐ தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், “குடும்பத்துடன் நேரத்தை செலவிடவே அவர் விரும்புவார். அதனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு தான்”, என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை பிசிசிஐ ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளரே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.
2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றியாளரான கவுதம் கம்பீர், 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு வழிநடத்தி சென்றுள்ளார்.
2023 ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அவர், அந்த அணியை பிளே-ஆஃப் வரை அழைத்து சென்றார்.
2024 ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து விலகி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மென்டாராக இணைந்தார். அதை தொடர்ந்து, அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையையும் வென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நல்ல காலம் பொறக்குது: அப்டேட் குமாரு
T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!