இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஆனால் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றது.
அதனையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணியில் பிசிசிஐ இறங்கியது.
இந்த நிலையில், இந்திய ஆண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது ஒப்பந்தம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று (ஆகஸ்ட் 14) கேள்வி எழுப்பிய நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் 86 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 544 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சில மாதங்கள் பணியாற்றினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது அவருடன் மோர்னே மோர்கலும் இணைந்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கம்பீர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தலித் முதல்வராக முடியாது” : திருமாவளவன் சொன்னது சரிதான்… ஆனா இது பிடிக்கல… சீமான் பேட்டி!