முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

Published On:

| By Jegadeesh

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் குரூப் ’டி’ பிரிவில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

France was the first team to advance to the next round

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் ஒரு கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

எனினும் 86-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ’டி’ பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், ரவுண்ட் ஆப் 16 (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

அதன்படி பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உடல் எடையை குறைத்து..கவர்ச்சியை அள்ளிவீசும் அனுபமா பரமேஸ்வரன்

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவுக்கு எதிராக அதிரடி காட்டிய மெஸ்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share