உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதிபெற்றது போர்ச்சுகல்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் களைகட்டி வருகிறது. இந்த நிலையில், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று (டிசம்பர் 7) போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை.
அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார்.
போர்ச்சுகல் ஆதிக்கம்
ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தது. அதிலும், அறிமுக வீரரான ராமோஸ், ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் தனது முத்திரையை பதித்தார்.
போர்ச்சுகல்லின் மற்றொரு வீரர் பெப்பே 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-0 தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
அவர் அடித்த கோல் புதிய சாதனை படைத்தது. உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் அதிக வயதுடைய நபர் (39 ஆண்டுகள் & 283 நாட்கள்) அடித்த கோல் என்ற பெருமையை பெப்பே பெற்றுள்ளார்.
அதே வேகத்தில், இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல்லின் ஆதிக்கம் தொடர்ந்தது. இளம்புலி ராமோஸ் 51வது நிமிடத்தில் ஒரு கோலும் அதே அணியைச் சேர்ந்த ரபேல் கியூரியோ 55வது நிமிடத்திலும் ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 4 கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆனாலும் மனம் தளராத சுவிட்சர்லாந்து அணி 58வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் பெற்றது. அந்த கோலை அகாஞ்சி அடித்தார்.
புதிய ஹீரோ ராமோஸ்
எனினும் போர்ச்சுகலின் வேட்டை நிற்கவில்லை. 67வது நிமிடத்தில் ராமோஸ் மீண்டும் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அரங்கத்தையும் அதிரவிட்டார். இது நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் ஹாட்ரிக் கோலாகும்.
2002இல் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸ், தான் களமிறங்கிய முதல் உலகக்கோப்பை தொடரிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து புதிய சாதனை படைத்திருந்தார்.
அதை இளம்புலி ராமோஸ் சமன் செய்திருக்கிறார். இதன்மூலம் ராமோஸ், உலக கால்பந்து அரங்கில் கவனம் ஈர்க்கும் வீரராக தடம் பதித்துவிட்டார்.
இதையடுத்து, போர்ச்சுக்கல் ரசிகர்கள் அவரை தங்களின் புதிய ஹீரோ என்று வர்ணித்து வருகின்றனர்.
இறுதியில் பேல் லியோ 92வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால், போர்ச்சுக்கல் 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் கால் இறுதியில் மொராக்கோவை எதிர்கொள்ளவுள்ளது போர்ச்சுகல்.
உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணி பெரிதாக ஜொலித்ததே இல்லை. அதிகபட்சமாக 4வது இடம் மட்டுமே பிடித்திருக்கிறது. இருமுறை ரவுண்ட் ஆஃப் 16சுற்று வரை சென்றுள்ளது.
எனவே அந்த அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று தொடக்கம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!