கத்தாரில் நடைபெற்றும் கால்பந்து உலகக்கோப்பை திருவிழாவில் நெதர்லாந்து – ஈக்வடார் போட்டி டிரா ஆனது.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் களைகட்டி வருகிறது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகள்கூட சாம்பியன்களைச் சாய்த்து வருகின்றன.
இதனால், இந்தத் தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாய் அமைந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்துவருகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 26) இரவு 9.30 மணிக்கு குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உலகில் 8வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தும் 44வது இடத்தில் உள்ள ஈக்வடாரும் அல்ரேயானில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் களம் கண்டன.
ஏற்கெனவே நெதர்லாந்து அணி, செனகல் அணியுடனான முதல் போட்டியை டிரா செய்திருந்தது.

இதேபோல் ஈகுவடார் அணி முதல் போட்டியில் கத்தார் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்து ஈகுவடாருக்கு அதிர்ச்சி அளித்தது.
நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கோடி கேக்போ, முதல் கோல் அடித்து அசத்தினார். இது, இந்த சீசனில் பதிவான அதிவேக (5 நிமிடம், 4 வினாடி) கோல் ஆனது.
இதனைத் தொடர்ந்து ஈகுடவார் அணி தொடர்ந்து தாக்குதல் பாணி ஆட்டத்தில் ஈடுபட்டது. குறிப்பாக 20 நிமிடங்களுக்கு மேல், ஈகுவடார் அணி அடுத்தடுத்து அட்டாக் மேல் அட்டாக் செய்தது.
ஆனால் நெதர்லாந்து அணியின் கேப்டன் விர்ஜில் வான் மற்றும் கோல்கீப்பர் நொப்பர்ட் ஆகியோர் சிறப்பாக தடுத்து நிறுத்தினர்.
இதன்பின்னர் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈகுவடார் அணி கோல் ஒன்றை அடித்து அசத்தியது. ஆனால் நடுவர்கள் அந்த கோலை அங்கீகரிக்கவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலையில் இருந்தது.

பின்னர் முதல் பாதி தொடக்கத்தில் நெதர்லாந்து கோல் அடித்ததைப் போல், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ஈகுவடார் அணியின் கேப்டன் வெலன்சியா அபாரமாக கோல் அடித்து அசத்தினார்.
இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டன.
ஆனால், இரு அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எந்தப் பலனும் கைகூடவில்லை. அதேநேரத்தில், 64வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் எஸ்டிபினின் அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் அடித்து வெளியேறியது.
அதைத் தொடர்ந்து ஆட்டம் முழுவதும் ஈகுவடார் அணி வசம் இருந்தது. இறுதியாக இரண்டாம் பாதி ஆட்டம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ஜெ.பிரகாஷ்