கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயினை வீழ்த்தி ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று (டிசம்பர் 1) நள்ளிரவு தோகாவில் உள்ள கலிபா இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிகட்ட லீக் போட்டியில், ‘இ’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் அல்வோரா மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
அதற்கேற்ப ஸ்பெயின் அணி வீரர்கள், முதல் பாதியில் அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இதனால், ஸ்பெயின் அணிக்கு எதிராக ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டிய நிலை உருவாகியது.
என்றாலும், முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.

இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜப்பான் அணி, 48வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தியது.
இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட, மீண்டும் 51வது நிமிடத்தில் ஜப்பான் அணி இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதில் இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட கோல் ‘அவே’ லைனை கடந்தது போல இருந்தது.
அதை வீடியோ மூலம் பார்த்து கோல் என்று உறுதி செய்தார் நடுவர். இதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களின் முயற்சிகளை ஜப்பான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இரண்டாம் பாதி ஆட்ட நேர இறுதியில் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.
இதன் மூலம் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜப்பான் அணி முதல் அணியாக குரூப் ஈ பிரிவில் இருந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியை ஸ்பெயின் டிரா செய்திருந்தால் இதே பிரிவில் உள்ள ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும். அது நடக்காத காரணத்தால் அந்த அணி வெளியேறி உள்ளது.
ஜெ.பிரகாஷ்
பிரபல தயாரிப்பாளர் மறைவு: திரையுலகினர் இரங்கல்!
இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும்: முதல்வருக்கு சு.சுவாமி கடிதம்!