கால்பந்து உலகக்கோப்பையில் கடைசிகட்ட லீக் ஆட்டத்தில் போலந்து அணியை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது.
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவில் நேற்று (நவம்பர் 30)நள்ளிரவு நடைபெற்ற போட்டியில், சி பிரிவில் இடம்பெற்றிருந்த போலந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா, பலமுறை கோல்களை அடிக்க முயற்சித்தது.
ஆனால் பலன் இல்லை. இதனால், முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளுமே கோல் போடாததால், ஆட்டத்தின் முதல் பகுதி 0-0என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி
அதேநேரத்தில், போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க போராடிக் கொண்டு இருந்தபோது, ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் போலந்து கோல்கீப்பர் வோஜ்சிக் ஸ்க்செஸ்னி பந்தை தடுத்தபோது அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் முகத்தில் அவரது கை பட்டது.
இது அவரை தாக்கியதுபோல இருந்ததால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்துவதற்காக முன்வந்த அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி பந்தை கம்பத்தின் மூலையை நோக்கி அடித்தார்.
அப்போது போலந்து கீப்பர் வோஜ்சிக் ஸ்க்செஸ்னி தனது உடலை சரித்து கைகளால் பந்தை வலைக்கு வெளியே தள்ளினார்.
இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 2 பெனால்டிகளை தவறவிட்ட முதல் வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்சி பெற்றார்.
பின்னர் விறுவிறுப்புடன் தொடங்கிய இரண்டாம் பாதியில் போலந்து வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 46வது நிமிடத்தில் மெக் அலிஸ்டர் கோல் அடித்து அசத்தினார்.
இது, உலகக்கோப்பையில் அவர் அடித்த முதல் சர்வதேச கோல் ஆகும். இதையடுத்து, போட்டியில் 0-1என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணி, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
அடுத்த சுற்றில் போலந்து, அர்ஜென்டினா
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மற்றொரு அர்ஜென்டினா வீரர் அல்வார்ஸ் தனது அணிக்காக மற்றொரு கோல் அடித்து அசத்தினார். அதேநேரத்தில், ஆட்டத்தின் இறுதி வரை கோல் அடிக்க போலந்து அணி போராடியது.
கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோதும் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில், 0-2என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
தொடக்கத்தில், சவுதி அரேபியா அணியுடன் அடைந்த அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, அர்ஜென்டினா அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் சி பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனால் சூப்பர் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது.
குரூப் சி பிரிவில் 4புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்த போலந்து அணி, உலக சாம்பியனான ஃபிரான்ஸை எதிர்கொள்ள உள்ளது.
இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
ஜெ.பிரகாஷ்
வாவ்.. வயசானாலும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா..லேட்டஸ்ட் படங்கள் இங்கே!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!