உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அர்ஜெண்டினா அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நாளையுடன் (நவம்பர் 13) நிறைவுபெற இருக்கிறது.
இந்த உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அரையிறுதியில் வெளியேறியது பல ரசிகர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.
இந்த நிலையில், கிரிக்கெட் ஜுரம் முடிந்து, அடுத்து கால்பந்து ஜுரம் ஆரம்பிக்க உள்ளது. ஆம், நவம்பர் 20 ஆம் தேதி முதல், 22 வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடங்க இருக்கிறது. இந்த தொடர், டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனால், உலக கால்பந்து ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். அதிலும், கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட கால்பந்து பிரபலங்களுக்கு ஆற்றில் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து அசத்தி வருகின்றனர்.
இந்த கால்பந்து உலகக்கோப்பையானது, அரபு நாடான கத்தாரில் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.
போட்டிகள், அங்கு உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற அணியாகவும், உலகின் மிக பலம் வாய்ந்த அணியாகவும் கருதப்படும் அர்ஜென்டினா அணி 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தொடரில், அர்ஜென்டினா அணி ‘சி ‘ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த அணிக்கு, மெஸ்ஸி தலைமை வகிக்கிறார்.
அவரது தலைமையின் கீழ், கோல்கீப்பர்களாக பிராங்கோ அர்மானி , எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பின்கள வீரர்களாக கோன்சாலோ மான்டியேல், நாஹுவேல் மோலினா , ஜெர்மன் பெசெல்லா , கிறிஸ்டியன் ரோமெரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி, லிசாண்ட்ரோ மார்டினெஸ், நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ, மார்கோஸ் அகுனா, ஜுவான் போய்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடுகள வீரர்களாக லியாண்ட்ரோ பரேடெஸ், கைடோ ரோட்ரிக்ஸ், என்ஸோ பெர்னாண்டஸ், ரோட்ரிகோ டி பால், எக்ஸிகியெல் பலாசியோஸ், அலெஜான்ட்ரோ கோம்ஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்கள வீரர்களாக பாலோ டி பாலா, லயோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, நிக்கோலஸ் கோன்சலஸ், ஜோக்வின் கொரியா, லாடரோ மார்டினெஸ் ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களின் பயிற்சியாளராக லியோனல் ஸ்கலோனி உள்ளார். இந்த அணி, கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
கிரிக்கெட் லைவ் ஸ்டீரிமிங்: களமிறங்கும் அமேசான்
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!