கால்பந்து உலகக்கோப்பை: சாம்பியனை வீழ்த்திய ஜப்பான்

விளையாட்டு

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது ஜப்பான்.

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாய் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று (நவம்பர் 23) 4 போட்டிகள் நடைபெற்றன. இதில் குரூப் இ பிரிவில் ஸ்பெயின் – கோஸ்டா ரிகா அணிகளும், ஜெர்மனி – ஜப்பான் ஆகிய அணிகளும் மோதின.

குரூப் எஃப் பிரிவில் குரோஷியாவும்-ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மொராக்கோவும் மோதின. குரூப் டி பிரிவில் ஃபிரான்ஸ் அணியும் ஆஸ்திரேலியா அணியும் களம் கண்டன.

ஸ்பெயின் – கோஸ்டா ரிகா

இதில் குரூப் இ பிரிவில் கத்துக்குட்டி அணியான கோஸ்டா ரிகாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின். முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே துடிப்புடன் ஆடியது. இதனால் அவ்வணி முதல் பாதி முடிவில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்து, இரண்டாம் பாதியிலும் ஸ்பெயினே ஆதிக்கம் செலுத்தியது. அல்வாரோ மொரட்டா கூடுதல் நேரத்தில் கோலடிக்க ஸ்பெயின் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் இ பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

football world cup won in japan

டேனி ஓல்மோ அடித்த கோல் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் 100ஆவது கோலாக அமைந்தது. மேலும் முதன்முதலாக உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ளது. 1958-இல் பிரேஸில் வீரர் பிலே தான் கோலடித்த இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.

தற்போது ஜேவி உலகக் கோப்பையில் கோலடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2018 உலகக் கோப்பையில் ரவுண்ட் 16 சுற்றைக்கூட ஸ்பெயின் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி – ஜப்பான்

ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33ஆவது நிமிஷத்தில் பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் முதல் கோலடித்தார் ஜெர்மன் வீரர் இல்கே குண்டோகன். இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜமால் முஸைலா அடித்த பந்து கிராஸ் பாருக்கு மேலே சென்றதால் இரண்டாவது கோல் வாய்ப்பு ஜெர்மனிக்கு கிடைக்கவில்லை.

எனினும், 75-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீரர் டகுமி மினா மினோ அடித்த முதல் பந்தை ஜெர்மன் கோல்கீப்பர் மானுவேல் நியுர் தடுத்தார். ஆனால் அதில் கிடைத்த ரிபெளன்ட் பிசகின்றி கோலாக்கினார் ரிட்ஸ டோவன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஜப்பான் அணி, 83-ஆவது நிமிஷத்தில் அடுத்த கோலை அடித்து அசத்தியது.

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜப்பான், முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சியை அளித்தது. இதேபோல் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதல் அதிர்ச்சி அளித்தது சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

football world cup won in japan

குரோஷியா – மொராக்கோ

2018 ரன்னர் அப் அணியான குரோஷியா அணியின் கேப்டனும், நான்காவது உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வீரருமான மொட்ரிக், மொராக்கோவுக்கு எதிராக கோலடிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை.

அதுபோல், மொராக்கோ வீரர்கள் அஸிதின் உனாஹி, ஹக்கீம் ஸியெச், அச்ரஃப் ஹகிமி ஆகியோரும் தங்கள் அணிக்கு கோல் போட முயன்றனர். அவர்களது முயற்சியும் வீணானது. இறுதியில் ஆட்டநேர முடிவில் இவ்விரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டையில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது.

ஃபிரான்ஸ் – ஆஸ்திரேலியா

அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் 9ஆவது நிமிஷத்திலேயே தனது அணிக்கு கோலடித்து ஃபிரான்ஸ்க்கு அதிர்ச்சி அளித்தார். இதைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வீரர் தியோ அளித்த பாஸை பயன்படுத்தி 27-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார் மிட்பீல்டர் அட்ரியன் ரபியோட்.

football world cup won in japan

அடுத்த சிறிது நேரத்திலேயே 32ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்தார் ஒலிவியர் ஜிரெளட். இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது ஃபிரான்ஸ். தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஃபிரான்ஸ் கை ஓங்கியது. இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஃபிரான்ஸ்.

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த ஃபிரான்ஸ் வீரர் என்ற சாதனை தியரி ஹென்றி வசம் (51 கோல்கள் உள்ளது). இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் 51 கோல்களுடன் சாதனை படைத்துள்ளார் ஒலிவியர் ஜிரெளட். இந்த குரூப்பில் ஃபிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

வங்கதேச சுற்றுப்பயணம்: மீண்டும் ரவீந்திர ஜடேஜா விலகல்!

திமுக, பாஜகவைத் தொடர்ந்து விசிக: திருமாவிடம் கொதித்த பெண் நிர்வாகி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *