உலக கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த பீலே நேற்று (டிசம்பர் 29) காலமானார். இவரைப்பற்றிய 10 தகவல்களை இங்கே பார்ப்போம்..
பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரை பெற்றார்.
பீலே தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட தொடங்கினார். சிறுவயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16ஆவது வயதில் இடம் பெற்றார்.
தனது 18ஆவது வயதில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இளம் வயதில் உலக கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையையும் பீலே பெற்றார்.
1962 ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார். இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது.
1970 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடிய பீலே, பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு கிடைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

கால்பந்து கிங் என்று அறியப்பட்ட பீலே, இதுவரை 1,283 கோல்களை அடித்திருக்கிறார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார்.
பீலே வின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சி அவரை தேர்தலில் களம் இறக்கியது. இதில் பீலே 1995-ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

பீலேக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயது மூப்பு காரணமாக பீலேவின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீலே ஒரு மாத கால போராட்டத்திற்கு பிறகு நேற்று (டிசம்பர் 29 ) உயிரிழந்தார்.

உலகின் மிகச்சிறந்த வீரரான பீலே கால்பந்தாட்ட ரசிகர்களால் கருப்பு முத்து என்று அழைக்கப்படுகிறார். பீலேக்கு மூன்று முறை திருமணமாகி இருக்கிறது. அவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்