கடந்த நவம்பர் 20 தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வரும் கால்பந்து 2022 போட்டிகள் தற்போது அரையிறுதி என்னும் அட்டகாசமான இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது.
அந்த வகையில் 32 அணிகளிலிருந்து அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு 16 அணிகள் மற்றும் அதிலிருந்து 8 அணிகளாக களமிறங்கிய காலிறுதிப்போட்டிகள், அதிலிருந்து நான்கே அணிகளாக அரையிறுதிக்கு அர்ஜெண்டினா, குரோசியா , ஃப்ரான்ஸ் மற்றும் மொரோக்கா முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியானது இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அதாவது டிசம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு அர்ஜெண்டினாவிற்கும் , குரோசியாவிற்கும் இடையே லூசைல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த 22வது உலக கோப்பையில் அர்ஜெண்டினா அணியின் பங்களிப்பை பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட விளையாடிய லீக் ஆட்டங்கள், ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதியில் பெரும்பாலும் தன் பலத்தை சரியாக காண்பித்திருக்கிறது.
அதே போல் குரோசியா அணியை பார்த்தோம் என்றால், ஜப்பானுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதியில் பிரேசில் அணியை வெளியேற்றி மாபெரும் வெற்றியைப் பெற்று எல்லோரையும் பேச வைத்தது.
முதல் அரையிறுதியில் மோத இருக்க கூடிய அர்ஜெண்டினா குரோசியா அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணிப்பாக இப்போது பார்க்கலாம்.
சொல்லப்போனால் இரண்டு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் , அர்ஜெண்டினாவை எடுத்துக் கொண்டோம் என்றால் தலைசிறந்த கோல்கீப்பர்களாக அர்ஜெண்டினாவின் எமிலியானோ மார்டினஷ் இருக்கும் போது இதை விடவா பலம் வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது.
அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அரையிறுதி ஆட்டத்தைப் பற்றி பேசும் போது ,
2018 ஆம் ஆண்டு ரன்னர் அப் ஆன குரோசியாவை வீழ்த்துவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்.
அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வீரரின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பற்றித் தெரியும், அவர்கள் எத்தனையோ தேசிய அணிகளை சர்வதேச போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.
என்னவாக இருந்தாலும் நாங்கள் எங்கள் ஆட்டத்தைக் காண்பிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
கால்பந்தை முழுமையாக கவனித்து வரும் விமர்சகர்களின் பார்வையில் பார்க்கும் போது , குரோசியா அணியின் மிட் ஃபீல்டராக இருக்க் கூடிய லூக்கா மோட்ரிக், அரையிறுதியில் மிகச் சிறந்த ஆட்டத்தை காட்டுவார், அணிக்கு பலம் சேர்ப்பார் என்றும் கணித்துள்ளார்கள்.
அர்ஜெண்டினா கேப்டனாக லியொனல் மெஸ்ஸி இருப்பதால், கண்டிப்பாக இந்த முறை ஒரு அசுரத்தனமான ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகளிலும் அரையிறுதிக்குச் சென்றிருக்கிறது அர்ஜெண்டினா. அந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் சென்றிருக்கிறார்கள்.
ஆக இந்த முறையும் அதே போல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
குரோசியா அணியை பார்க்கும் போது குரோசியா 2வது முறையாக அரையிறுதியில் ஆட இருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் ஒரு வெறித்தனம் இருக்க தான் செய்கிறது என்கிறார்கள் கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள்.
குரோசியா அணியின் வீரர்கள் கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கும் திறனை வைத்து என்ன தான் சாதுரியமாக ஆடினாலும் , தடுப்பாட்டத்தில் சொதப்புவார்கள்.
ஆக இந்த முறை அதனை சரி செய்து எப்படி அர்ஜெண்டினாவிற்கு ட்ஃப் கொடுக்க இருக்கிறார்கள் என்பதை லூசைல் மைதானம் தான் சொல்ல வேண்டும்.
அதே சமயம் இரு அணிகளும் கால்பந்து சாம்ராஜியத்தில் நன்றாக ஆடும் அணிகள் என்ற பெயர் பெற்றிருப்பதால் அனைத்து கால்பந்து ரசிகர்களிடையே ஒரு எதிர்ப்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
குரோசியா அணியைச் சேர்ந்த ஜ்லாட்கோ தாலிக் அரையிறுதியைப் பற்றிப் பேசும் போது , “2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாங்கள் தான் ரன்னர் அப். அதில் அரையிறுதியில் நாங்கள் எதிர்கொண்டது இங்கிலாந்து அணியை. அதில் நாங்கள் பெற்ற வெற்றியை வேற லெவலில் கொண்டாடினார்கள் உலக கால்பந்து வீரர்களும், ரசிகர்களும்.
அதன் பின் நாங்கள் ஆடியதில் எனக்கே பிடித்தது பிரேசிலுக்கு எதிரான ஆட்டம். அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டுக்கான அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டம் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் நாளைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ,இதுவரை ஆடிய ஆட்டங்களில் இது தான் மிகச் சிறப்பானது என்ற வகையில் இருக்கும். அந்த அளவுக்கு நாங்கள் இந்த அரையிறுதியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
போட்டி ஒரு புறம் இருந்தாலும் என் அணியைச் சேர்ந்த வீரர்களாக இருந்தாலும் , ரசிகர்களாக இருந்தாலும் மிக மகிழ்ச்சியாக இந்த ஆட்டத்தை பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இன்னொரு புறம் ஃபிஃபாவில் எடுத்திருக்க கூடிய ஆட்டத்துக்கு முந்தைய கருத்துக்கணிப்பைப் பார்க்கும் போது, அர்ஜெண்டினா அரையிறுதியிலிருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
பவித்ரா பாலசுப்ரமணியன்