ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக் சாய் ரெட்டி – சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.
40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசியாவின் அனுபவம் வாய்ந்த முகமது அஹ்சன் மற்றும் ஹென்ட்ரா செட்டியவான் ஜோடியை 21-11, 21-12என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது.
இதனையடுத்து நேற்று இரவு நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராஜ் ஜோடி 21-18என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 13-14என இருந்த நிலையில் காயம் காரணமாக சீன தைபே ஜோடி போட்டியில் இருந்து விலகியது.
இதன்மூலம் ஆந்திராவைச் சேர்ந்த 22வயதான சாத்விக் ரெட்டி- மும்பையில் பிறந்த 25 வயதான சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஒன்று இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.
இதுவரை ஒரே ஒரு தங்கம்!
1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை ஒரே ஒரு தங்க பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது.
1965ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கம் வென்றார். அதேவேளையில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா பல்வேறு பிரிவுகளில் 17 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் சாத்விக்-சிராக் ஜோடி இன்று(ஏப்ரல் 30) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் 58ஆண்டுகால ஏக்கத்தை தணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா
தஞ்சையில் நாளை சித்திரை தேரோட்டம்!