இங்கிலாந்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா லெஜண்ட்ஸ் அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.
யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்த அணியில், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசப் பதான், ராபின் உத்தப்பா, ஆர்.பி.சிங், வினய் குமார், அம்பதி ராயுடு என பல இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த 2024 லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற பிறகு, பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ‘டவ்பா… டவ்பா…’ என்ற பாடலுக்கு, யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ரீல் ஒன்றை உருவாக்கி அதை இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்தின் நிர்வாக இயக்குனரான அர்மன் அலி, இந்த காணொளி மாற்றுத் திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும், பயனர் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல், இழிவுபடுத்தக்கூடிய காணொளிகளை பரப்பியதாக, மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்தியா தேவநாதன் மீதும் அர்மன் அலி புகார் அளித்துள்ளார்.
பாரா பேட்மின்டன் வீராங்கனை மானஷி ஜோஷி உள்ளிட்ட பலர், அவர்களை இந்த வீடியோவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதை தொடர்ந்து, அந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய ஹர்பஜன் சிங், அது குறித்து விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“இங்கிலாந்தில் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற பிறகு, நாங்கள் இணையத்தில் வெளியிட்ட ‘டவ்பா… டவ்பா…’ வீடியோவுக்கு எதிராக புகார் தெரிவிக்கும் அனைவருக்கும், நாங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த காணொளியை வெளியிடவில்லை என தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நாங்கள் ஓவ்வொரு நபரையும் மதிக்கிறோம்.
இந்த காணொளி 15 நாட்கள் கிரிக்கெட் விளையாடிய பிறகு, எங்களின் உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறிக்கவே வெளியிடப்பட்டது. நாங்கள் யாரையும் புண்படுத்த இந்த காணொளியை வெளியிடவில்லை. இன்னும் நாங்கள் தவறு செய்ததாக நீங்கள் எண்ணினால், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என தனது பதிவில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மினிக்கி மினிக்கி’ : கவனம் ஈர்க்கும் தங்கலான் பாடல்!
நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!
இந்தியன் 2 : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?