உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பரிசுத் தொகை விவரம் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் 22 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இந்த போட்டியை நடத்தும் கத்தார் திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது.
டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் போட்டிகளின் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.
அதன்படி, மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்த பரிசுத் தொகையாக ஃபிஃபா அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,586 கோடியாகும்.
இந்த ஆண்டு போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் 344 கோடி ரூபாய் முதல் பரிசாக ஃபிஃபா வழங்கவுள்ளது.
இறுதிப்போட்டியில் 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கவுள்ளது. 3வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 220 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
4வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாய் வழங்கப்படும். அதேபோல் கால் இறுதிச் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் இந்திய மதிப்பில் தலா 138 கோடி ரூபாய் வழங்கப்படும்.
2வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.
கடைசியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றபோது மொத்த பரிசுத் தொகை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,258 கோடியாகும். தற்போது 40 மில்லியன் டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு (2023) நடைபெறவுள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
மோர்பி பாலம்: உயர்நீதிமன்றம் எழுப்பிய புதிய கேள்வி?