உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தை அதிரவைத்த பிரான்ஸ்

Published On:

| By Selvam

இன்று (டிசம்பர் 11) நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கத்தாரின் அல்பேட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆட்டத்தின் துவக்கத்தில் பிரான்ஸ் அணி வீரர்கள் அட்டாக் செய்தனர். இங்கிலாந்து அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

17-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஆர்லின் சவ்மெனி கோல் அடித்து அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்த போது, பிரான்ஸ் வீரர்கள் தடுத்தனர். ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி துவங்கியவுடன் இரண்டு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹேரி கேன் கோல் அடித்தார். இரண்டு அணிகளும் சமமாக கோல் அடித்ததால், ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

அப்போது, இங்கிலாந்து அணியின் மெக்வயர் கோல் அடிக்க முயன்றபோது கோல் போஸ்டில் அடித்து வெளியே சென்றது.

78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஆலிவர் கிரெளடு தலையால் பந்தை மோதி கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதிக்கு பிறகு 8 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது பிரான்ஸ் அணி வீரர் கிங்ஸ்லி கான்மேன் ஃபவுல் செய்ததால், இங்கிலாந்து அணிக்கு ஃபிரி கிக் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் இங்கிலாந்து அணி வீரர் மார்கஸ் ரேஷ்ஃபோர்டு கோல் அடிக்க தவறிவிட்டார். இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, மொராக்கோ அணியுடன் மோத உள்ளது.

செல்வம்

மொராக்கோவிடம் தோல்வி: கானல் நீரான கனவு! கண்ணீருடன் ரொனால்டோ..

டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!