2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!

Published On:

| By Minnambalam Login1

கடந்த 2022-ஆம் ஆண்டு வளைகுடா நாடான கத்தாரில் பிரமாண்டமாக உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது.

அடுத்து 2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை மற்றொரு வளைகுடா நாடான சவுதி அரேபியா பெற்றுள்ளது.

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது.

இதையடுத்து, 2030 மற்றும் 2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடத்தும் நாடுகள் குறித்த முடிவு ஃபிபா கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலகக் கோப்பை கால்பந்து தொடங்கி 100 ஆண்டுகள் ஆகும் 2030 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் , போர்ச்சுகல் , மொரோக்கா, ஸ்பெயின், அர்ஜென்டினா, பாரகுவே , உருகுவே என 6 நாடுகளில் நடைபெறுகிறது.

பாரகுவே, போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகள் முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளன.

இனி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. பல நாடுகளும் உலகக் கோப்பையில் விளையாடும் வகையில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மொத்தம் 104 ஆட்டங்கள் உலகக் கோப்பையில் நடைபெறும்.

2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது. இது ஆசிய கண்டத்தில் நடைபெறும் 3வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆகும்.

சவுதி அரேபியா அதிகம் வெப்பம் நிலவும் நாடு என்பதால் போட்டிகள் குளிர் காலத்தில் நடத்தப்படும். அதே வேளையில், சவுதி அரேபியாவுக்கு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டதும் 21 அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிகமாக மனித உரிமை மீறல் நடைபெறும் நாட்டுக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாமா? என்று அம்னிஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஃபிபாவிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உலகக் கோப்பை தொடர் முதன்முறையாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

17 வருட திருமண பந்தம்… விவாகரத்து முடிவை அறிவித்த சீனு ராமசாமி

பொலிவு பெறும் வைக்கம் பெரியார் நினைவகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share