கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

Published On:

| By Prakash

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணியான கானாவை போர்ச்சுகல் அணி வீழ்த்தியுள்ளது.

22வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரின் 15வது போட்டியில் குரூப் எச் பிரிவில் உள்ள போர்ச்சுகல் – கானா அணிகள் நேற்று (நவம்பர் 24) மோதின.

ஆட்டம் ஆரம்பித்த 35வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார்.

ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த பெனால்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார்.

fifa football world cup portugal won

இதன்மூலம் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். அடுத்ததாக, கானா அணியின் ஆண்ட்ரே அயூ 73வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இதன் பின்னர் போர்ச்சுகல் அணி 78வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 80வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்தது.

இதன்பின்னர் 90வது நிமிடத்தில் கானா அணி இரண்டாவது கோலை அடிக்க, ஆட்டம் 3-2 என்ற நிலையில் பரபரப்புக்குள்ளானது. இரண்டாம் பாதி முடிவுக்கு வந்த நிலையில், 9 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.

கூடுதல் நிமிடங்களில் கானா அணி இன்னொரு கோல் அடித்து சமன் செய்ய தீவிரமாக முயற்சி செய்ததால் ஆட்டம் சூடுபிடித்தது.

இதனால் போர்ச்சுகல் அணி வீரர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கானா அணியின் முயற்சியை போர்ச்சுகல் அணி வீரர்களும், கோல் கீப்பரும் சிறப்பாக தடுத்தனர்.

இறுதியாக போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல் அணி முதலிடத்தை பிடித்துள்ளது

ஜெ.பிரகாஷ்

கைதிகள் உறவினர்களுடன் பேச இண்டர்காம்!

ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share