போட்டிகளில் விளையாடாமல் ஐ சி சி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் முன்னிலையில் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகியவற்றை தொடர்ந்து ஐ சி சி இன்று (ஜூன் 21) டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய அணி முதலிடம்
அதன்படி அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், இங்கிலாந்து 114 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
ஜோ ரூட்டின் ஜோரான முன்னேற்றம்
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 861 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 877 புள்ளிகள் குறைந்து 3 வது இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸ் 2 இடங்கள் முன்னேறி 883 புள்ளிகளுடன் 2 வது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்திய வீரர்கள் தரப்பில் காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக விளையாடாத ரிஷப் பண்ட் 10 வது இடத்திலும், ரோகித் ஷர்மா, விராட்கோலி ஆகியோர் 12,13 வது இடத்திலும் உள்ளனர்.
முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின், ஜடேஜா
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர்கள் தரப்பில் டாப் 10 பட்டியலில் கடந்த ஒரு வருடமாக விளையாடாத பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர்.
டாப் 10 : 3 ஆல்ரவுண்டர்கள்
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 352 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், அக்சர் பட்டேல் 310 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் டாப் 10 தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள ரிஷப், பும்ரா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் உள்ளனர். எனினும் அவர்கள் நடப்பு தொடர்களில் விளையாடி வரும் வீரர்களை விட முன்னணியில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது
கிறிஸ்டோபர் ஜெமா