ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் 20 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோதுகிறது. Families not to travel with players
இதற்காக, இந்திய அணி பிப்ரவரி 15 ஆம் தேதி துபாய் புறப்படுகிறது. இந்த நிலையில், துபாய்க்கு செல்லும் போது மனைவி குழந்தைகளை இந்திய வீரர்கள் அழைத்து செல்ல முடியாது. புதியதாக பி.சி.சி.ஐ சுற்றுப்பயண வரைமுறை முதன் முதலாக சாம்பியன்ஸ் டிராபியுடன் அமலுக்கு வருகிறது.
சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவாக இருந்தால் குடும்பங்கள் வீரர்களுடன் செல்ல இனி அனுமதியில்லை. அதையும் மீறி குடும்பத்தை அழைத்து சென்றால், அனைத்து செலவையும் வீரர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் 45 நாட்களுக்கு மேல் இருந்தால் வீரர்களின் குடும்பத்தினர் இரண்டு வார காலம் தங்கி கொள்ளலாம்.
மேலும், எந்த ஒரு வீரரும் தனியாகப் பயணம் செய்யவும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு சில வீரர்கள் அணிப் பேருந்தில் செல்லாமல் தனியாகச் சென்றதை பிசிசிஐ அதிகாரிகள் கண்டதாகச் சொல்லப்படுகிறது. அணியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு, இனி அனைவரும் அணிப் பேருந்தில்தான் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.