ENGvsNZ: அதிரடி கம்-பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்… இங்கிலாந்து அபார வெற்றி!

விளையாட்டு

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், தற்போது இந்த அணிகள் ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில், இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 3வது போட்டியில் மோதின.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதிர்ச்சி டூ பேரதிர்ச்சி!

அதன்படி, முதல் 3 ஓவர்களிலேயே பேர்ஸ்டோ, ரூட் என இருவரின் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பவுலர் ட்ரெண்ட் போல்ட்.

ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ், 3வது விக்கெட்டிற்கு 199 ரன்கள் சேர்த்து எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தனர். டேவிட் மலான் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் சாதனை! 

உலகக்கோப்பைக்காக தான் அறிவித்த ஒருநாள் போட்டி ஓய்வை திரும்ப பெற்று அணிக்கு ரிட்டர்ன் ஆன பென் ஸ்டோக்ஸ், 9 சிக்ஸ், 15 ஃபோர் என தனது அதிரடி ஆட்டத்தால் 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றார். முன்னதாக, ஜேசன் ராய் 180 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது.

இவர்களை தவிர்த்து பேட்டிங்கில் வேறு யாரும் சோபிக்காததால், இங்கிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தாக்குதல் பந்துவீச்சு!

தொடர்ந்து 369 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து, துவக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ரீஸ் டாப்லி, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் தாக்குதலில், நியூசிலாந்து அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நம்பிக்கை இழந்தது.

அதே நேரத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலுடன் மொயீன் அலி  மற்றும் லைம் லிவிங்ஸ்டன் என ஸ்பின்னர்களும் இணைந்துகொள்ள, நியூசிலாந்து அணி 187 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அந்த அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

தனது அபார பேட்டிங்கிற்காக, பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

முரளி

நிபா வைரஸ் எதிரொலி: இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கின!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0