ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ENGvsAFG who is enter semi final
கடந்த 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தொடரில் இருந்து வெளியேறி விட்டன.

அதேவேளையில் பி பிரிவில் அரையிறுதிக்கு செல்வது யார் என்பதில் இன்னும் இழுப்பறி நீடிக்கிறது.
பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. நேற்று ராவல்பிண்டியில் நடைபெற இருந்து இரு அணிகள் இடையேயான ஆட்டம் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஒரு புள்ளி இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட நிலையில் 3 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் என இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தன.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதை நம்பலாம்.