கிரிக்கெட் உலகில் எந்த வீரரும் இதுவரை செய்யாத சாதனையை இங்கிலாந்து வீரர் ஓலி போப் செய்துள்ளார். இப்படிப்பட்ட சாதனையை சச்சின், பிராட்மேன் கூட படைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஆலன் ஓலி போப் சதமடித்தார். இதன் மூலம் அவர் வித்தியாசமான ஒரு சாதனையை படைத்துள்ளார்.
ஓலி போப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 48 போட்டிகளில் ஆடி 7 சதங்கள் அடித்துள்ளார். இந்த 7 சதங்களையும் அவர் 7 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்துள்ளார் என்பதுதான் விசித்திரமானது. கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஓலி போப் 135 ரன்கள் குவித்தார். இதுதான் அவரின் முதல் சதம் ஆகும்.
தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாம் மைதானத்தில் அவர் 145 ரன்கள் அடித்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி நகரில் 108 ரன்கள் குவித்தார். அடுத்ததாக 2023 ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 208 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் 196 ரன்கள் அடித்த ஓலி போப் கடந்த ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். தற்போது, இலங்கைக்கு எதிராக 103 ரன்கள் குவித்துள்ளார். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் தன்னுடைய 7 சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்தது இதுதான் முதல்முறை ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்… விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்?