ENGLANDvsBANGLADESH: ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியின் 7வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து இடையே இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து. அதன்படி தொடக்கவீரர்களாக களமிறங்கி டேவிட் மாலன் பேர்ஸ்டோ இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக பேட்டை சுழற்றினர்.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில் பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஷகிப் பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.
எனினும் மாலனுடன் ஜோ ரூட்டும் அதிரடியை கையிலெடுக்க, இங்கிலாந்தின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் பறந்தது.
வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாப்புறமும் சிதறடித்த மாலன் 91 பந்துகளில் சதமடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 6வது சதத்தை பதிவு செய்த மாலன், குறைந்த இன்னிங்ஸில்(23) விளாசியவர் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து அதிரடியை காட்டிய அவர், 16 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு உறுதுணையாக ஆடிய ரூட் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் உட்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி.
இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் தனது 3வது அதிகபட்ச ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது.
வங்கதேச தரப்பில் மெஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் அஹமத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேச அணி.
ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் ரீஸ் டோப்லே. அவர் வீசிய இரண்டாவது ஓவரில் தொடக்க வீரர் டன்சித் ஹசன் 1 ரன்னிலும், அதிரடி வீரர் ஷான்டோ டக் அவுட்டிலும் வெளியேறினர்.
அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசனும் டோப்லே பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மிராஸ் 8 ரன்னில் வெளியேற 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது வங்கதேசம்.
எனினும் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், லிட்டன் தாஸுடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் ரஹீம் பொறுமையாக விளையாடி அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களும் அரைசதம் அடித்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வங்கதேசத்தின் மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.
இதனால் வங்கதேச அணி 48.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில், ரீஸ் டோப்லே 4 விக்கெட்டும், வோக்ஸ் 2 விக்கெட்டும், சாம் கர்ரன், மார்க் வுட், அடில் ரஷித், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Leo Third Single : “அன்பெனும்” பாடல் நாளை ரிலீஸ்..!