T20Worldcup : வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான லீக் போட்டிகள் முடிவடைகிறது.
இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெரிய அணிகளான இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்த நிலையில் குரூப் பி பிரிவில் இதுவரை ஆஸ்திரேலியா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாம் அணியாக தகுதி பெற நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் நமீபியா அணியை டிஎல்எஸ் விதிப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 5 புள்ளிகளுடன் ரன் ரேட்டும் அதிகரித்து இரண்டாம் இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியது.
அதேவேளையில் 5 புள்ளிகள் பெற்ற ஸ்காட்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இன்று (ஜூன் 16) காலை 6 மணிக்கு நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
அதன்படி செயின் ட் லூசியாவில் உள்ள டேரன் சமி மைதானத்தில் இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் மெக்முலலம் 6 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.
தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்காட் பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். வார்னர், கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற போட்டி ஸ்காட்லந்து பக்கம் திரும்பியது. மேலும் கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டதால் போட்டியில் பதற்றம் ஏற்பட்டது.
எனினும் அதற்கு தடையாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேகரித்தனர்.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில், 68 ரன்னில் ஹெட் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஸ்டோனிஸ் (59) ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து கடைசி கட்டத்தில் களமிறங்கிய டிம் டேவிட் தன் பங்கிற்கு அதிரடியாக பேட்டை சுழற்ற, ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
தோல்வி கண்ட ஸ்காட்லாந்து அணி ரன்ரேட்டிலும் சரிவை சந்தித்ததை அடுத்து தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.
இதன்மூலம் குரூப் பி பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணியுடன் இங்கிலாந்து அணியும் செல்வது உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
10,020 பேருந்துகள் அகற்றப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி!
”இவிஎம் இயந்திரங்களை அகற்றுங்கள்” : எலான் மஸ்க் வலியுறுத்தல்!