சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. ஏற்கனவே, இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாத நிலையில், தற்போது இங்கிலாந்தும் போட்டியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் லாகூரில் வரும் 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் தலிபான்கள் செயல்படுவது இங்கிலாந்து மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், 160 இங்கிலாந்து எம்.பிக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இருந்து விலகும்படி கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகள் நேற்று ஆப்கானிஸ்தானுடனான போட்டி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை தவிர்க்க வேண்டாமென்று முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்க தலைவர் ரிச்சர்ட் தாம்ஸன் கூறுகையில், ‘பெண்கள் கிரிக்கெட் உலகம் முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது. தலிபான்கள் இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
போட்டியில் இருந்து விலகினால் ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை இழப்பார்கள். அவர்கள் என்ஜாய் செய்யும் ஒரு விஷயத்தை நாம் கெடுக்க வேண்டாம் என்கிற எண்ணத்தில் ஆட்டத்தில் இருந்து விலகுவதை கை விட்டோம் ‘என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பல கிரிக்கெட் வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். தங்களை ஒரு அகதிகள் அணியாக கருதும்படி மெர்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் ஒரு அங்கமான எம்.சி.சி அறக்கட்டளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று எம்.சி.சி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் கிட்டத்தட்ட ஒரு கோடியை இந்த வீராங்கனைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது.