ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மலேசியா அணியை வீழ்த்தி எகிப்து அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்னையில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படாத SDAT WSF ஸ்குவாஷ் உலகக் கோப்பை 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 13ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது.
எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம்பெற்றது.
லீக் சுற்றில் தோல்வியே அடையாத அணியாக முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மலேசியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது.
அதேபோன்று ஜப்பானை வீழ்த்தி நடப்பு சாம்பியன் எகிப்து அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நடப்பு சாம்பியனான எகிப்தை பலம் வாய்ந்த மலேசியா எதிர்கொள்வதால் இறுதிப்போட்டியில் இரு அணிகளிடையே பலத்த போட்டி நிலவும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி முதல் செட்டிலேயே மலேசியாவின் சின் யின் யீ 3-0 என்ற கணக்கில் எகிப்தின் கென்சி அய்மேனை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார்.
எனினும் அடுத்த செட்டில் சுதாரித்து கொண்ட எகிப்து அணியின் எலினென், மலேசியாவின் டேரன் பிரகாசத்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
மூன்றாவது செட்டில் எகிப்தின் அபோல்கெய்ர் 3-1 என்ற கணக்கில் மலேசியாவின் அய்ரா அஸ்மானை தோற்கடித்தார்.
பரபரப்பாக நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி செட்டில் எகிப்தின் எல் ஹமாமே மற்றும் மலேசியாவின் ஓங் இருவரும் கடுமையாக மோதினர். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்ட்து.
இதனையடுத்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற எகிப்து அணி SDAT WSF ஸ்குவாஷ் உலகக் கோப்பை சாம்பியன் கோப்பையை தட்டி சென்றுள்ளது.
அதேவேளையில் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3வது இடத்தை பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா